Sunday, December 16, 2012

ஃபோனிக்ஸ் - 2

சகோஸ்....

ல் ஃபோனிக்ஸ் பதிவில் ஃபோனிக்ஸ் வழியில் சில எழுத்துக்களைப் பார்த்தோம். இன்று மீதமுள்ள எழுத்துக்களையும் பார்த்து விடுவோம் இன்ஷா அல்லாஹ்.

  • n - ந் - ந -- நம்பர் - Number -- ஒரே ஒரு ‘ந’தான் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே அதை சரியாக உச்சரிக்கவேண்டும். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - name | nail | nut | nose | neem | nay
  • o - ஆ -- ஆம் இந்த எழுத்தின் உச்சரிப்பும் ‘ஆ’ என்றுதான் வரும். இதை ‘ஓ’ என்று மனனம் செய்யாதீர்கள். சிறு குழந்தைகளுக்கும் ஃபோனிக்ஸ் வழியிலேயே மனனம் செய்ய சொல்லித் தாருங்கள்.  மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - odd | otter | on | off | object | office
  • p - ப் - தமிழில் ப என்னும் மெல்லினத்தின் உச்சரிப்பே இங்கே வரும்.  மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - plum | pen | pin | paint | plant
  • q - க்யூ - இதை உச்சரிக்கும்போது மட்டும் ஒரு வாக்கியத்தை நினைவில் வையுங்கள். அதாவது, Q and U stick like Glue :). இது எதற்காக சொல்கிறேன் என்றால், எங்கேயெல்லாம் Q வருகிறதோ அங்கேயெல்லாம் U வும் உடன் வருவது தவிர்க்க இயலாதது. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - queen | quail | quilt | quiz | question | quick 
  • r - ர் - தமிழில் உள்ள மெல்லிய ‘ர’வே ஆங்கிலத்தில் உள்ளது. கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம், ‘ர்’ வை எத்தனை குறைந்த அழுத்தத்தில் உச்சரிக்க முடியுமோ அத்தனை குறைந்த அழுத்தத்தில் உச்சரிக்க வேண்டும். அமெரிக்கர்களை கவனித்தீர்களானால் பேசப்பேச ‘ர’வை விழுங்கி விட்டார்களோ என்றிருக்கும். அத்தனை மெல்லிய ‘ர’ உச்சரிப்பு இருக்கும் அவர்களுக்கு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - rat | run | rug | red | rail | repair
  • s - ஸ் - வட மொழி எழுத்தான ‘ஸ்’ மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளது. இதுவும் ‘ச’ வை விட இன்னும் குறைந்த அழுத்தத்தில் உச்சரிக்கப்படுவது. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - sweet | sun | sat | stick | swan | send 
  • t - ட் - மெல்லிய ‘ட’ வை உச்சரிக்க இந்த எழுத்தை பயன்படுத்துவோம். தமிழில் உதாரணமாக, அட்டிகை, சுட்டி, போட்டி, இதில் எல்லாம் வரும் ‘ட்டி’ யையே ஆங்கிலத்தில்  t என உபயோகிக்கிறோம். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - train | top | tan | tin | turn
  • u - அ - இதையும் ‘யூ’ என்று உச்சரிக்கவோ, குழந்தைகளுக்கு பழக்கவோ செய்யாதீர்கள். ‘அ’ என்றே அதிகமாக இது புழங்குவதால் அப்படியே உச்சரியுங்கள். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - bus | but | mud | rug | cup | hug 
  • v - வ் - இதை தமிழில் உள்ள வ போலவே கீழுதட்டில் அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். உதடுகளை குவித்தல்ல. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - van | vain | vent | vis | volume | video
  • w - வ்- இதை தமிழில் உச்சரிப்பது போலல்லாமல் உதடுகளை குவித்து ‘வாவ்’ என்று சொன்னால் எப்படியோ அப்படி உச்சரிக்க வேண்டும். v க்கும் wக்கும் அப்படி என்ன வித்தியாசம் தெரிந்து விடப் போகிறது என்றால்... கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். உங்களுக்கு இல்லையென்றாலும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு. எப்படி நாம் ல / ள /ழ வித்தியாசமாய் உச்சரிக்கிறோமோ அதே போல் v / w இரண்டையும் தனித்தனியாக உச்சரித்துப் பழக / பழக்க வேண்டும்.  மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - wagon | win | went | worm | wurst | worst ( wurst, worst இரண்டுமே ஒரே மாதிரி உச்சரிப்பு கொண்டவை. ஆனால் பொருள் வேறு வேறு)
  • x - க்ஸ் - அதிகமாக இந்த எழுத்தை ஆரம்பமாக கொண்டு வார்த்தைகள் ஆரம்பிப்பது மிக மிக மிகக் குறைவு. உதாரணமாக - X ray fish / Xmas / Xyst இது போல். ஆனால் அதிகமாக வார்த்தையின் நடுவிலோ, இறுதியிலோ வருவது மிக அதிகம். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - box | fox | exist | fix | maximum | exit
  • y - ய் - தமிழில் உள்ள ய’ வின் இடத்தை இந்த எழுத்து உபயோகிக்கிறது.
    மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - yellow {ஸ்டைலாக எல்லோ என சொல்லாதீர்கள், சொல்லித்தரவும் செய்யாதீர்கள். இதை யெல்லோ என்றே சொல்ல வேண்டும் :) }  yale | yummy | yes | york 
  • z -- இதற்கு தமிழில் சரியான உச்சரிப்பு கிடையாது. ஒரு தனித்துவம் மிக்கதொரு எழுத்தே Z. :) மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள்  - Prize | Whiz | Zentih | Zeal | Zebra | Zoo. 

ம்ம்... இப்படி உச்சரிப்பு ஒலியை / phonicsஐ பழக்கினால் மட்டுமே குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பிக்கையில் எளிதாக இருக்கும். உங்களுக்கும். ஆனால் எழுத்தின் பெயர், ஏ, பி, சி... என்று பழ(க்)கினீர்கள் என்றால் அதன் பின் புதிய சொற்களை உச்சரிக்கப் பழகும்போது மிகுந்த தடுமாற்றம் கிட்டும். எனவே இன்ஷா அல்லாஹ் இந்த உச்சரிப்பையே பழகுங்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரியப்படுத்தவும்.

என் பிள்ளைகளுக்கு Phonics சொல்லித் தர சில யூடியூப் விடியோக்கள் மிகுந்த பலனளித்தன. அவை உங்களுக்கும் :)




மீண்டும் சந்திக்கும் வரை.... :)

Sunday, December 9, 2012

Sentences -- வாக்கியங்கள் -- அடிப்படைப் பாடம் இரண்டு.

அன்பின் சகோஸ்....

எங்களின் விசா, வேலை பிரச்சினையினால் மிகுந்த தாமதம் ஆகி விட்டது, பாடங்களை தொகுத்து எழுதுவதில். தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... இன்ஷா அல்லாஹ் இனி குறுகிய காலத்தில் அதிக பதிவுகளால் இதை நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.

முந்தைய பாடத்தில்* வாக்கியங்கள் பார்த்தோம் இல்லையா... அதனையே சற்று விரிவாக இன்னும் பார்க்கலாம்.

Subject and Predicate (எழுவாயும் பயனிலையும்)

அதாவது ஒரு வாக்கியத்தில் ஒரு பொருள் / மனிதர் / இடம் பற்றி பேசுவோம் எனில், குறிப்பிட்ட அந்தப் பொருள் Subject எனவும், அந்தப் பொருளைப் பற்றி நாம் என்ன குறிப்பிடுகிறோமோ அதை Predicate எனவும் கூறுகிறோம்.  எப்பொழுதுமே  Subject முதலிலும், Predicate இறுதியிலும் வரும் என்றாலும், சில சமயங்களில், வாக்கியத்தின் அழகுக்காக, வலிமை சேர்க்க மாற்றியும் கூறுவோம். தமிழில் ஒரு உதாரணம் பாருங்கள்.

சீதையைக் கண்டேன். -- இது பொதுவாக எழுதப்படுவது. Subject + Predicate. இதில் சீதை என்பவர்தான் Subject . இவரைப் பற்றித்தான் பேசப்போகிறோம்.

கண்டேன்” என்பது Predicate . சீதை பற்றிய வரி அது. இந்த விமர்சனம், அதாவது சீதையைப் பற்றி பேசும் பாகம்தான் Predicate .

கண்டேன் சீதையை. -- இது கொஞ்சம் வித்தியாசமானது. முதலில் Predicateஉம், அதன் பின் Subjectஉம் வரும். Predicate + Subject.

 இதையே ஆங்கிலத்தில் எப்படி உபயோகிப்பது??

Bus is coming -- பேருந்து வந்து கொண்டிருக்கிறது. Subject + Predicate.
Here comes the bus. -- இதுவும் பேருந்து வந்து கொண்டிருக்கிறது என்னும் அர்த்தத்தைத் தான் தரும். இங்கே வந்துகொண்டிருக்கிறது பேருந்து என எழுத மாட்டோம்.
சில மொழிகளில் சில வாக்கியங்களை அமைக்கும்போது Subject + Predicate என்னும் ரீதியில் எழுதுவது / பேசுவது அழகாகும். ஆனால் அதுவே எல்லா மொழிகளிலும், எல்லா வாக்கியத்திலும் அழகாகாது.

இன்னும் சில Predicate + Subject முறையில் நீங்கள் தினசரி வாழ்வில் பரிசோதிக்கக் கூடிய எளிய உதாரணங்களைக் காண்போம்.

  1. Struggling worker. (கஷ்டப்படும் தொழிலாளி)
  2. Playing Cricket is easy.
  3. On Sundays I play in the beach.
  4. Before going to the interview, pray to God.
  5. Make way for the lady please.
  6. Live life peacefully.

முதலில் உள்ள வாக்கியத்திலும், தொழிலாளியைப் பற்றித்தான் பேசுகிறோம். எனினும், அந்த விமர்சனத்தை (கஷ்டப்படும்), அவர் பற்றிய பேச்சை முதலிலும், அதன் பின்னரே யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்றும் குறிப்பிடுகிறோம். சரியா??

உங்களுக்கு கடினமாக தோன்றினால், எப்பொழுதும் போல  Subject + Predicate வழிமுறையையே கையாளலாம். சாதாரணமான Subject + Predicate வாக்கியங்களின் உதாரணங்கள் கீழே.

John always comes late to class.
My friend and I go to Quran class.
Many pages of the book were torn.
I baked a cake.
She likes rainbow.

கவனிங்க. Subject + Predicate ஐ Phrase and Clauseக்கு குழப்பிக்க கூடாது. அப்படின்னா??

 Phrase and Clause

ஒரு பொருளைப்(Subject ) பற்றி பேசுகிறோம்(Predicate ) என்பது வேறு.
ஒரு வாக்கியத்தின் முழுமை / யின்மை என்பது வேறு.
உதாரணமாக, 
நான் எடுத்து... என்பது ஒரு முழுமையடையாத வாக்கியம். 
‘நான் எடுத்துச் சென்றேன்”, 
“நான் எடுத்து வைத்தேன்”, 
“நான் எடுத்துவிட்டேன்”... என்பன போன்றவை முழுமையான வாக்கியங்கள்

அது போல் ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியம் அமைக்கும்போது முழுமையாக இருக்க வேண்டும். உதாரணமாக,
She came into the Store.
இதில் into the store என்று மட்டும் சொன்னால் என்ன சொல்கிறார்கள் என்பதே புரியாது இல்லையா?? “கடையினுள்.... என்ன... மீதியை சொல்” என்போம்.... அதுதான் Clause

Phrase என்றால் முழுமையடையாத ஒரு வாக்கியத்தின் பகுதி. அந்தப் பகுதியில் Subjectஓ, Predicateஓ அல்லது இரண்டுமே கூட இல்லாமல் இருக்கலாம்.  அதாவது, ஒரு வாக்கியத்தை பிரிச்சு படிச்சா புரியாத ஒரு பாகம் கிடைக்கும், புரியற ஒரு பாகம் கிடைக்கும்.  புரியாத பாகம்தான் Phrase. தமிழில் உதாரணம் பாருங்க:

  • அந்த வழியில..
  • ஒரு வேடன்...
  • நீல நிற வேன்...

இப்ப மேற்கண்ட சொற்றொடர்கள் மூலம் நமக்கு ஏதாவது புரியுதா??? இல்லை. புரியலை. இதையே இப்ப கீழே பாருங்க.

அந்த வழியில இருட்டாக இருந்தது.
ஒரு வேடன் அந்தப் பறவையை பிடித்தான்.
நீல நிற வேன் அந்த சந்துக்குள் நுழைந்தது.

இப்பதான் இந்த வாக்கியங்கள் முழுமையானவை. இப்படி பிரிச்சு படிச்சா புரிதல் தராத ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் பாகங்களை Phrase என்போம். நீல நிற பாகங்களை இல்லாட்டி ஒரு வாக்கியத்திற்கு அர்த்தம் தரும் பாகங்களை Clause என்போம்.

Phrase என்றால் சுருக்கமா, ஆபத்தில் இருக்கும் ஒரு மனிதன் போலன்னு வெச்சுக்குங்க. எதாவது ஒரு விதத்துல உதவினாத்தான் அது முழுமையடையும். ஒகே? இப்ப ஆங்கில உதாரணங்களைப் பார்க்கலாம்.

உதாரணமாக:
  • during the cricket match.
  • at the theater.
  • a butterfly.
  • move out.
  • pick up.

Clause என்பது Superman மாதிரி. ஒவ்வொரு Phraseக்கும் ஒரு Clause வேண்டும் இல்லைன்னா வாழ்க்கையில அனாதையா நிக்கும்...
...எது? Phrase..!
Yes. Right. 

ஒரு Phraseஇல் எதாவது ஒன்னுதான் இருக்கும். Verb இல்லைன்னா Noun. இரண்டுமே இருக்காது. வினை அல்லது பெயர்ச்சொல்.

Clause, the Superman இடத்தில் ரெண்டுமே இருக்கும். Noun + Verb. உதாரணமாக,
  • Pickup the stick.
  • I caught a butterfly.
  • She met at the theater.
  • He got sick during the cricket match.

இப்ப புரியுதா?? இந்த Phrase, Clause இரண்டிலுமே இன்னும் பாகங்கள் உள்ளன. ஆனால் அதைப் பத்தி இப்ப படிக்க வேண்டாம். இன்ஷா அல்லாஹ் ஆங்கிலத்துல நீங்க நல்லா தேறின பின் மாஸ்டர்ஸ் படிக்கிறப்ப படிக்கலாம். :)

இன்றைய பாடத்திற்கான கேள்விகள்:

I. கிளாஸ்ரூமும் இல்லை, கேள்வித்தாள்களும் இல்லை, எப்படி நீங்க படிக்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கறது? இதற்காக பவர்ஸ்டார் ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு எனக்கு தெரிஞ்ச விதத்துல ஒரு Animated Movie, அதாங்க குறும்படம்... ஹி ஹி தயாரிச்சிருக்கேன். முதல் உதாரணம் பாருங்க. அதன் பின் மீதம் உள்ள படங்களில் என்ன நடக்குதுன்னு உங்களை அந்த இடத்தில் வெச்சு பேசிப்பாருங்க. அந்த வாக்கியங்களை கமெண்ட்டாக எழுதுங்க இங்கே சரியா?



நாம் இது வரை தொடர்வினை மட்டுமே பார்த்துள்ளோம். எனவே அதை மட்டுமே உபயோகிக்கவும். உதாரணமாக: I am running, I am writing... இந்த மாதிரி. முடிந்த வரை முயற்சி செய்து இதற்கான பதில்களை கமெண்ட்டில் இடவும்.

II.கீழ்வருவனவற்றில் Subject + Predicate வித்தியாசப்படுத்திக் காட்டுங்க.

  1. I want an apple.
  2. That book is boring.
  3. The Quran was revealed by Allah.
  4. The students are writing the exam.
  5. Only I can tell you what the truth is.

 III. கீழ் வருவனவற்றில் Phrase எது Clause எது என்று வேறுபடுத்திக் காட்டுங்க. ஒரு வாக்கியத்தில் இரண்டும் வராது. ஏதேனும் ஒன்றுதான் இருக்கும். கவனம்.

  1. In a dark and dangerous road
  2. Before the next light
  3. If they want to talk to me
  4. I don't know the answer.
  5. In front of the building.

Bye சகோஸ் !

Sunday, November 4, 2012

Howwwwwzzzzzzzzzzaaaaatttttttttt.....!!!!

முன்குறிப்பு:
ஒலி வடிவ லின்க்கில் பிரச்சினையுள்ளதால் இன்னொரு வழியை கையாண்டுள்ளேன். இன்ஷா அல்லாஹ் இதில் ஏதும் பிரச்சினை வராதென்றே நினைக்கின்றேன். கீழே வரும் இடங்களில்  சிவப்பு வண்ணத்தில் உள்ள வாக்கியங்களை சுட்டினால் வேறொரு விண்டோவில் ஒலி வடிவ உச்சரிப்பை கேட்கலாம். 
=========================================================================
இந்தப் பதிவின் தலைப்பை கிரிக்கெட் ஆரவம் உள்ள எவரும் மறக்க இயலாது. கரெக்ட்டா???? அதில் வரும் ‘How' தான் இன்றைய கேள்வியின் நாயகன்.... ஐ மீன்.... பதிவின் நாயகன்.... :))

How என்பது நம் தினசரி வாழ்க்கையின் தவிர்க்க இயலாத ஒரு வார்த்தை. காலை முதல் இரவு வரை எத்தனை தடவை (How many times :) ) நாம் இதனை உப்யோகிக்கிறோம் என்பதை கணக்கிடவே முடியாது. ஆனால் அத்தகைய வார்த்தையை சரியான வழியில் உபயோகிப்பதும் சிக்கலான பாடமே... மற்ற கேள்விகளும் (what / when / where / which / who / whom / whose / when / why) சிக்கலானவையே என்றாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிக்கோளைப் பொறுத்து மாறும்.

WHAT  -- ஏதேனும் ஒரு பொருளை / உயிரை / இடத்தை  குறிக்கும்போது                                                                                  
WHEN -- எப்பொழுது ( காலத்தை குறிக்கும்போது)             
WHY -- ஏன் (காரணத்தை குறிப்பது)                                           
WHERE -- எங்கே (மெய் அல்லது மெய்நிகர் இடத்தை)     
WHOM -- யாரை                                                                                  
WHOSE -- யாருடைய                                                                       
WHICH -- எந்த                                                                                      
WHO -- யார்                                                                                           

மேலே பார்த்தீர்களானால் அந்தந்த வார்த்தைகளே எதைப் பற்றி குறிப்பிடுகிறோமே அதைப் பொறுத்து நாம் உபயோகிக்கிறோம்.... ஆனால் HOW அப்படியல்ல. அதன் பின் வரும் வினைச்சொல்லைப் பொறுத்து ( வினைச்சொல் -- செய்யும் / செய்த/ செய்யப்போகின்ற வேலையைக் குறிக்கும்) மாறும். உதாரணமாக...

எத்தனை வாழைப்பழம் நீ வாங்கினே.... (மறக்க முடியாத ஒரு டயலாக் :)) )
எத்தனை / எவ்வளவு உனக்கு வேண்டும் (பணம் / பண்டம் என எதுவும்... கொள்ளளவு)
எவ்வளவு தூரம் நாம் இன்னும் போக வேண்டும்..

இப்பொழுது பார்த்தீர்களானால் மேற்கண்ட வாக்கியங்கள் அனைத்தும் HOW வில்தான் ஆரம்பிக்கின்றன.... என்றாலும் அதனைத் தொடர்ந்து வரும் சொற்களைப் பொறுத்து அதன் பொருளே மாறுபடுகிறது. எத்தனை வாழைப்பழம் என்னும் இடத்தில் எவ்வளவு வாழைப்பழம் என்னும் பதத்தை உபயோகிக்க இயலாது....  தமிழில், அதுவும் பேச்சுத்தமிழில் பிரச்சினை தெரியாது.... ஆனால் ஆங்கிலத்தில் முக்கியம். எளிய விதத்தில் நாம் இதனை உபயோகிக்க பழகுவோம், இன்ஷா அல்லாஹ்.

1. COUNTABLE NOUNS 
எண்ணக்கூடிய அளவுகள் வரும்போது எப்பொழுதுமே HOW விற்கு பிறகு MANY என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். கோளங்கள்,  நட்சத்திரங்கள் உட்பட இந்த வகையில்தான் சேரும்.

உதாரணங்கள்:

2. UNCOUNTABLE NOUNS  
அதுவே எண்ணவியலா / அளக்க இயலா கொள்ளளவு என்றால் HOWவிற்கு பிறகு MUCH என்னும் பதத்தை உபயோகிக்க வேண்டும். இங்கே பணம், பெட்ரோல் எல்லாமே அளக்கக்கூடியதுதானே என்றால்.... இப்படி நினைத்துக் கொள்ளுங்கள்... 1,2,3 என்று எண்ணவியலாதவை / வரிசைப்படுத்த இயலாதவை இந்த வகையில் சேரும்
சில டிப்ஸ்களை நினைவில் வைத்துக் கொண்டால் இது இன்னமும் எளிதாகும்.
1.எண்ணக்கூடிய அளவில் உள்ள பொருட்களை / பன்மையை HOW MANY என்று குறிப்பிட வேண்டும்.
2. எண்ணவியலா / ஒருமையில் குறிப்பிடக்கூடிய பொருட்களை HOW MUCH என்று குறிப்பிட வேண்டும்.
3. ஒரு பொருளை மட்டுமே குறிப்பிடுகிறோம்... ஒரு பொருளைப் பற்றி பேசுகிறோம் எனும்போது HOW MUCH என்று குறிப்பிடுவோம்.

இரண்டும் சேர்த்தும் ஒரு உதாரணத்தை கவனியுங்கள். HOW MUCH COFFEE(எண்ணிக்கையிலடங்காதது) DO YOU DRINK AND HOW MANY SPOONS(எண்ணக்கூடியது) OF SUGAR YOU TAKE?

சுயபரிசோதனை:
1.கீழே உள்ள வாக்கியங்களில் என்ன பதம் ( MANY / MUCH ) வரும் என்பதை பூர்த்தி செய்யுங்கள்.
1. HOW _____________ APPLES DO YOU WANT?
2. HOW _____________ APPLE JUICE IS LEFT?
3. HOW _____________ MILK IS LEFT?
4. HOW _____________ LITRES OF MILK DOES SHE NEED?
5. HOW _____________ LIFE IS LEFT TO LIVE?
6. HOW _____________ YEARS OF LIFE DO WE HAVE?
7. HOW _____________ INFORMATION IS AVAILABLE?
8. HOW _____________ INFORMATION BROCHURES ARE AVAILABLE?
9. HOW _____________ IS LEFT TO READ?
10. HOW _____________ PAGES DID YOU READ?

மேற்கண்ட கேள்விகளை சரியாக விடையளித்தால் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆங்கில இலக்கணத்தில்  நான்கு பாடங்களை நீங்கள் புரிந்து கொண்டதாக அர்த்தம். :))

2.அதே போல், இந்தப் பாடத்தில் உபயோகித்துள்ள வாக்கியங்களை தமிழ்ப்படுத்துங்கள். இங்கே கமெண்ட்டிடுங்கள். 

இன்ஷா அல்லாஹ், கூடிய சீக்கிரமே அடுத்த பாடத்தை படிப்போம்.... அதுவரை, Take care :)

Monday, October 22, 2012

ஃபோனிக்ஸ் / Phonics

Howdy !! :)))

சகோஸ்....

நம்மில் பலருக்கு ஆங்கிலம் தெரியும் ஆனால் பேசுவதுதான் பயம் என்றுதான் என் எண்ணமிருந்தது, இந்த தளத்தை ஆரம்பிக்கும் வரை, அதன் பின் குறைந்த காலத்திலேயே அடிப்படைகளும் பிரச்சினை என்பது புரிந்தது. இப்பொழுது, உச்சரிப்பே பலருக்கும் ஒரு பிரச்சினை என்பது தெளிவாகிறது. காரணம் என்ன? நம் நாட்டிலும் இன்னும் பல நாடுகளிலும் இன்று வரை (இப்பொழுது சில இடங்களில் மாற்றம் உள்ளது என்றாலும்), உச்சரிப்பை ஒரு பாடமாக நடத்துவது கிடையாது.

அரபியில் ‘தஜ்வீத்’ என்பது ஒரு பாடம். அந்தப் பாடம் எழுத்துக்களையும் அதன் விதவிதமான உச்சரிப்புக்களையும் மட்டுமே கொண்டது. எங்கே ஒரு எழுத்து உச்சரிக்கப்படாது, எங்கே அது மூச்சை நிறுத்தி பேசுவது போல் வரும், எங்கே அது நெடிலாக ஒலிக்கும், எங்கே குறில் என பலப்பல பாடங்களைக் கொண்ட ஒரு கல்வி அது. அது போல நாம் ஆங்கிலத்தை கற்கிறோமா, கற்றுக் கொண்டோமா, கற்றுக் கொடிக்கிறோமா என்றால்..... இல்லை. இல்லையாதலால்தான் நமக்கு ஒரு வார்த்தையின் எழுத்துக்கள் முழுதும் தெரியும் என்றாலும் அதை உச்சரிக்கையில் பிரச்சினை வருகிறது.... 

உதாரணத்திற்கு என் மகனுக்கு எழுத்துக்களை அதன் ஒலியை வைத்துத்தான் கற்பிக்கிறேன்.... அதனாலேயே ’அல்லாஹ்’ என்பதற்கு ஸ்பெல்லிங் u-l-l-a-h என்பான். ஏனெனில் ‘A' என்பதை ‘ஏ’ என்றும் ‘U' என்பதை ‘அ’ என்றும் உச்சரிக்கவே அவன் பழகியுள்ளான். என்ன, ‘U' என்பதை ‘அ’ என்றா சொல்ல வேண்டும்.... ‘யூ’ என்றுதானே சொல்ல வேண்டும் என்றால்....இல்லை சகோ... அந்த எழுத்தின் பெயர்தான் ‘யூ’ வே தவிர அதனை பெரும்பாலும் நாம் உச்சரிப்பது ‘அ’ என்றுதான். உதாரணத்திற்கு, umbrella, unto, upon, ugly, understand, umpire என இதன் வரிசை நிற்காது. இப்பொழுது புரிகிறதா?

ஒரு எழுத்தின் பெயருக்கும், அதன் உச்சரிப்புக்கும் உள்ள வித்தியாசம்??? எழுத்துக்களின் உச்சரிப்புக்கான பாடம்தான் ‘Phonics' / ஃபோனிக்ஸ் என்கிறோம். இது நல்லபடியாக தெரிந்தால்தான் ஆங்கிலத்தை பேசுவதும், படிப்பதும், செவியேற்பதும் எளிதாகும்..... வருத்தமான விஷயம் என்னவெனில், மாதத்திற்கு 500 ரூபாய் முதல் 5000 வரை கட்டணம் வாங்கும் எந்த ‘Spoken English Course Institute'ம் இதனை ஒரு பாடத்திட்டமாக வைப்பதே இல்லை. அவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் பிரைவேட், பப்ளிக் பள்ளிக்கூடங்கள் என எதுவுமே அதை முக்கிய பயிற்சியாக பார்ப்பதில்லை. அதுக்குன்னு நாம விட்டு விட முடியுமா.... நீங்கள் ஆங்கிலத்தில் 100க்கு 100 வாங்கும் முதுநிலை பட்டதாரி ஆனாலும், உங்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பாடம் உபயோகமாகும். எனவே குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்தப் பாடமும் தொடரும்...இன்ஷா அல்லாஹ். LKG முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் உங்கள் வீட்டில் இருந்தாலும், இது அவர்களுக்கும் உபயோகப்படும். எனவே அதைப் பற்றியும் படிப்போம் வாருங்கள்.

phonics படிக்க நம் நாட்டில் மிகச் சிறந்த வழி, டிக்‌ஷனரி. எல்லாரிடமும் டிக்‌ஷனரி இருக்கிறதா? கண்டிப்பாக இருக்கும். இல்லாதவர்கள் வாங்கிக்கொள்ளுங்கள், நீங்கள் ஷேக்ஸ்பியர் இல்லை என்றால் கண்டிப்பாக உபயோகப்படும். :)

இன்றைய பாடம் ரொம்ப ரொம்ப ரொம்ப எளிமையான அடிப்படைப் பாடம். ஆனால் கண்டிப்பாக இது தெரிந்து கொள்வது நல்லது. பிள்ளைகளுக்கும் இந்த பாடத்தில் இருந்தே ஆரம்பிப்பது சிறந்தது. சரியா??

  • a - ஏ - ae -- ஏப்பிள் (யே என்று படிக்காதீங்க.... ஏ வை ஏ என்றுதான் படிக்கோணும்) -- மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் - cat | bat | trap | gap
  • b - ப்ப -bba - அழுத்தி உச்சரிக்க வேண்டியது. அரபி ‘ப’ போல்தான் உச்சரிப்பு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள்-- bat | bingo | bait | be
  • c - க்க -cka - தமிழில் வரும் க போல்தான் அடிப்படை உச்சரிப்பு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள்-- cat | can | cap | clove | creep 
  • d - ட்ட - dda - தமிழில் அழுத்தி உச்சரிக்கும் டி (அடி, தடி, படி...) போலத்தான் இதன் உச்சரிப்பும். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- dog | deal | done | ding
  • e - எஹ் - eh - தமிழில் வரும் எலி, எடு போன்ற வார்த்தைகளில் உள்ள ‘எ’வின் உச்சரிப்பு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- end | exit | exam | error | electric
  • f - ஃப் - விசிறியை ஆங்கிலத்தில் குறிக்கும்போது ‘ஃபேன்’ என்கிறோமில்லையா அதேதான் அதன் அடிப்படை உச்சரிப்பு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- fan | fat | fail | flare | finish
  • g - க்க - gga -  தமிழில் அழுத்தி உச்சரிக்கும் ‘க’ போன்றது. அதாவது கவனி / கம்பீரம் / கனம் / கங்கை போன்ற வார்த்தைகள். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- give | go | get | grow | grey
  • h - ஹ - hha - தமிழில் வடமொழி எழுத்தான ‘ஹ’வை உச்சரிக்கும்போது வரும் ஒலி போன்றது. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- hat | hub | hope | hello | hail. 
  • i - இ - (என்ன இங்கே வியப்பு மேலிடுகிறதா? உண்மையில் இந்த எழுத்தின் பெயர்தான் 'ஐ - i' ஆனால் அதன் அடிப்படை உச்சரிப்பு ஒலி ’இ’தான். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- India | insect | ink | irritate | it
  • j - ஜ் - இதுவும் தமிழில் உள்ள வடமொழி எழுத்தான ‘ஜ’ வும் ஒரே உச்சரிப்பைக் கொண்டவை. எனவே இதில் ஏதும் உச்சரிப்பு பிரச்சினை இல்லை என்றே நினைக்கிறேன்.... எனினும் சில வார்த்தைகளில் ஜ என்னும் உச்சரிப்பு இல்லாமல் ‘ய’ என்னும் உச்சரிப்பு வரும். உதாரணத்துக்கு: jalapeno - இதை யலபேனோ (ஒரு வகை மிளகாய்) என்றுதான் உச்சரிப்பர். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- jam | jug | jack | jeep | jet
  • k - க்க - இங்கே ‘C' யின் அடிப்படை உச்சரிப்பும் 'K' வின் அடிப்படை உச்சரிப்பும் ஒன்று போல்தான். மெல்லிய ‘க’வின் ஒலியே இரண்டிலும். மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- king | key | kangaroo | kilogram | kit | kin
  • l - ல் - தமிழின் உள்ள ‘ல’ மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளது. எனவே எந்த வித நாக்கு குழறலுக்கும் சாத்தியமில்லை. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- lack | leg | lamp | lip | let | luck
  • m -  ம்ம் - ‘ம’வின் உச்சரிப்பு ஒலியே 'm'க்கு. மாற்றமில்லா உச்சரிப்பு கொண்ட வார்த்தைகள் -- Mom | May | mint | mat | map | magic

ஓக்கே சகோஸ்... மீதி எழுத்துக்களை நாம் இதன் அடுத்த பகுதியில் பார்க்கலாம். ஒரு டிப்ஸ்: இங்கே மேலே உதாரணங்களுக்காக தந்துள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் வைத்து ஒவ்வொரு வாசகம் எழுதுங்கள். எழுத முயலுங்கள். அதை உச்சரித்தும் பழகுங்கள். பழைய ஆங்கிலம்-தமிழ் ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் பக்கத்திலேயே அதனை உச்சரிப்பது எப்படி என்று போட்டிருப்பார்கள். படித்துப் பாருங்கள். அல்லது தனி பக்கத்தில் கூட இருக்கும். படித்துப் பாருங்கள். எளிதாகிறதா என்று.

இனிமேல் ஒரு வார்த்தை படித்தால் அதை ஒலி வடிவில் படிக்க முயற்சியுங்கள். எழுத்தின் பெயர் வடிவில் இல்லை.... உதா: /cat/ -- ka - eh - t -- க்க -ஏ- ட் ...இது போல் சரியா??

ஆக மொத்தம் மூன்று விதமாக இப்போதைக்கு இந்த ஆங்கில பாட தளம் பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஆங்கிலம் - ஃபார்மல் / இன்ஃபார்மல் உரையாடல் - மற்றும் இதோ இந்த ஃபோனிக்ஸ் பகுதி. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம். Peace be upon you :)

Thursday, October 18, 2012

தொடர்வினையும், சுவாரசியமான உரையாடலும்


ஹெல்லோ சகோஸ்,
எப்படி இருக்கீங்க…. மன்னிக்கனும்போன பாடத்தில் சில எடிட்டிங் வேலைகள் செய்ய சொல்லி அனைவரும் சொல்லியும்அதைச் செய்ய எனக்கு நேரம் கிட்டவில்லை…. மன்னிச்சுக்குங்கஇனிமே அந்த பிரச்சினைகள் இல்லாம எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ். சரி, இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமான பாடம். என் அருமை அண்ணன் ஹைதர் அலி அண்ணா, விடாமுயற்சியின் இன்னொரு பெயர் எனலாம். J மாஷா அல்லாஹ்…. அவரும் ஒரு காரணம்இந்த தளத்தை ஆரம்பிக்க. அவருடன் நடந்த சுவாரசியமான உரையாடல் இங்கே உங்களுக்கு பதிவாக. இது தொடர்ச்சியாகவும், தொடர்ச்சியாக இல்லாமலும், வாக்கியங்களை எப்படி பேசுவோம் என்பதற்கான பாடம். இதன் முடிவில் சில வாக்கியங்கள் உங்களுக்கான கேள்வி. இன்ஷா அல்லாஹ் தொடர்வோம் வாருங்கள் J

ஹைதர்: கேட்டல், படித்தல், பார்த்தல். அனைத்து வழிகளிலும் ஆங்கிலத்தை உள்ளே திணிக்கிறேன்
ஹா ஹா ஹா

annublogs: சரி நான் உங்களை கேள்வி கேட்கவா?

ஹைதர்:: கேளுங்க

annublogs: ஒகே
நான் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கிறேன்- இதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வீங்க?

ஹைதர்:: i see one video. do you understand?

annublogs: I very well understand that you have some mistakes :)

ஹைதர்:: spling mistag

annublogs: பார்த்துக்கொண்டிருக்கிறேன்---- இது தொடர்ச்சியான விஷயம்.... see-இந்த வார்த்தை தொடர்ச்சியை குறிக்கவில்லை :) புரியுதா??? எங்கே தப்புன்னு?

ஹைதர்:: yes i do

annublogs: :).... you do??? then give me the right answer :)

ஹைதர்:: no i don t. இன்னும் எனக்கு பயிற்சி வேண்டும்

annublogs: ha ha haa... சரி...கவனிங்க. தொடர்ச்சியா ஒரு விஷயத்தை செய்யறோம்னு சொல்றப்ப அந்த வினையோட '-ing' சேர்த்துக்குவோம். அதாவது இது ஒரு "நிகழ்காலத் தொடர் வினை" (Present Continuous Tense)   

ஹைதர்:: ம்ம்

annublogs: example: reading, playing, seeing, eating.... இது மாதிரி

ஹைதர்:: சகோ நீங்க சொல்லி தாங்கே

annublogs: இன்னொரு விஷயம்.... ஆங்கிலத்தில் see / watch -- (கைல கட்டறது இல்லை....) இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு

ஹைதர்:: ம்ம்

annublogs: see-என்பது வெறுமனே பார்த்தல்.... தை நாம் பார்க்கிறோமோ அதிலிருந்து எதையும் கற்கவேண்டும் / புரிந்து கொள்ள வேண்டும் என்பது தேவையில்லை.... ஆனால் watch -- என்பது, கவனித்தல். நாம் குறிப்பிட்டு, எதையோ கற்க வேண்டி / தெரிந்து கொள்ள வேண்டி .... மகிழ்ச்சிக்காக கூட இருக்கலாம்.... ஒரு பொருளோடு அந்த வேலையை செய்கிறோம் என்று அர்த்தம்.

ஹைதர்:: நான் சொல்லவா?

annublogs: சொல்லுங்க. :))

ஹைதர்:: she might be watching tv.  சரியா? :'(

annublogs: இல்லை... இல்லை...உங்க தரப்பிலிருந்து சொல்லுங்க. முதல்ல உங்களைப் பார்ப்போம்....அப்புறமா அண்ணியப் பத்தி பேசலாம் :)

ஹைதர்:: ஹா ஹா

annublogs: I see a rainbow, I see an egg, I see the cloud.... – இது நாம் ஒரு பொருளைப் பார்க்கையில் சொல்வது. ஆனால், அதுவே ‘கவனிக்கையில்’ ??

ஹைதர்:: i do watching tv. சரியா?? இல்லையா?

annublogs: அண்ணா... 'do' என்பதுதான் வினை(do - செய்தல்) ...அதைத்தான் watchingனு சொல்லியாச்சே... ரெண்டு வினை வருமா??? எனவே I am watching the TV என்பதே சரி

ஹைதர்:: ம்ம்

annublogs: இல்லைன்னா... ஒரு வீடியோவாக இருந்தால் I am watching a video

ஹைதர்:: yes

annublogs: சரி, இதையே நீங்க நேற்று நான் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன்னு சொல்லுங்கநேற்று நான் ஒரு வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஹைதர்:: was i am watching a video

annublogs: Good.... "I was watching a video"...

ஹைதர்:: ஐய். ஜாலி

annublogs: இது குறிப்பா...அந்த நேரத்துல நீங்க என்ன செஞ்சிட்டிருந்தீங்கன்னு கேட்கிறப்ப சொல்வீங்க.... சரியா? :))

ஹைதர்: நான் கற்றுக் கொள்வேன் நம்பிக்கை வந்து விட்டது

annublogs: அல்ஹம்துலில்லாஹ் பாய்.... உண்மையிலேயே நல்ல முன்னேற்றம் :)

ஹைதர்: கேளுங்ககேள்விகளை

annublogs: :)) நேரம் சம்பந்தப்படாம.... வெறுமனே நேத்து அந்த வீடியோவைப் பார்த்தேன்’ -- இதை எப்படி சொல்வீங்க

ஹைதர்: தெரியவில்லை?? எழுத தெரியவில்லை

annublogs: ஆஹா முயற்சி செய்ங்கதிருத்திக்கலாம்

ஹைதர்: yerter tay I watching a video

annublogs: இல்லை... இது மறுபடியும் தொடர்ச்சியா / தொடர்வினையா சொல்றீங்க.... இப்ப நான் ஒரு வாக்கியம் எழுதறேன்... அதைப் பார்த்துட்டு எப்படி எழுதனும்னு யோசிங்க சரியா . Yesterday I saw your Umrah Photo.

ஹைதர்: Yesterday i watching a video.

annublogs: ஓரளவு சரி... :)

ஹைதர்: Yesterday i watch a video

annublogs: good.... masha allaah.... சின்ன பிழை மட்டும்தான். yesterday I watched a video. எப்பொழுதும் past வேலையை குறிக்கும்போது வினையுடன் – verb-உடன், ‘ed’ சேர்த்த வேண்டும் (சில எக்ஸெப்ஷன்ஸ் உண்டு…. உதாரணத்திற்கு see/saw, learn/learnt, dream/dreamt, go/went…. இந்த மாதிரி) ஆனால் பொதுவான விதி, இறந்த காலத்தை குறிக்கும்போது verb-உடன் ‘ed’ சேர்த்த வேண்டும்.

ஹைதர்: thank you sister

annublogs: சரி பாய்.... இன்ஷா அல்லாஹ்
 பார்ப்போம்.... வஸ் ஸலாம் :)

ஹைதர்: வஸ்ஸலாம்.


என்ன சகோஸ், மேலிருக்கும் உரையாடல் பார்த்தீங்களா??? இதில் இன்று நாம் என்ன கற்றுக் கொண்டோம்... ஒரு செயலை தொடர்ச்சியாக செய்யும்போது, குறிப்பிட்ட நேரம் வரை அதை செய்து கொண்டிருப்பின், அதனை தமிழில் நிகழ்காலத் தொடர் வினைஎன்பார்கள். அதுவே ஆங்கிலத்தில் ‘Present Continuous Tense' என்பார்கள். இந்தப் பெயரெல்லாம் மனனம் செய்து வைக்க வேண்டிய அவசியமில்லை. இன்ஷா அல்லாஹ், புரிந்து கொண்டால் போதும். இன்னும் சில உதாரணங்களைக் காணுங்கள்.

நிகழ்காலத்தில்:
·         Baby is crying.
·         Water is boiling.
·         Machine is grinding.
·         She is walking.
·         He is reading.
·         They are playing.
·         Dog is barking.

இதுவே இறந்த காலம் எனும்போது:
·         He was sleeping.
·         I was drinking.
·         She was studying.

எதிர்காலம் கொஞ்சம் சிக்கலானது.... (வாழ்க்கையிலும் அப்படித்தான் என்கிறீர்களா??? :))) எனவே அதை மட்டும் சில நாட்களுக்கு பின்னர் பார்ப்போம். இனி, இந்த வார கேள்விகள்.

கீழிருப்பதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படியுங்கள். பேசிப்பாருங்கள். இங்கேயும் எழுதுங்கள். தப்பை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு. :))

1. நான் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறேன்.
2. ரயில் வண்டி வந்து கொண்டிருக்கிறது.
3. அவன் அலைபேசியை தொலாவிக் கொண்டிருக்கிறான்.
4. அவள் தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறாள்.

ஆச்சா??? இனி கீழ் வரும் வாக்கியங்களில் அடைப்புக்குறிக்குள் உள்ள வினையை எப்படி எழுதவேண்டுமோ, அப்படி எழுதுங்கள். :)

example:
Q: I __________________ (TEACH) Science.
A: I am teaching Science.

Questions:
1. I ______________(LEARN) Maths.
2. He ________________(RUB) his eyes.
3. She __________________ (WRITE) her homework yesterday.
4. Gobu _____________(CYCLE) last evening.
5. Minnie ___________________(LEAVE) to India today.
6. Maryam  _______________(BLOG) about Eid.
7. We ________________(SLEEP) on the sofa last night.
8. We _________________(GO) to Masjid now.
9. ______________(PACK) is a big task.
10. ______________(LISTEN) is _______________ (LEARN)

இன்னொரு முக்கியமான விஷயம்…. நான் யதேச்சையாக இந்த தளத்தை (http://aangilam.blogspot.com) இன்றுதான் பார்த்தேன். இந்த தளத்தில் ஏற்கனவே ஒரு சகோதரர் கிட்ட்த்தட்ட எல்லா பாடங்களையும் எழுதியுள்ளார். அதையும் உபயோகித்துக் கொள்ளுங்கள். மிக நன்று சகோ அருண்..!
சரி சகோஸ்.... மீண்டும் சந்திப்போம்.... என்ன கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் :))